வயல் பாட்டு
வயல்வெளி எங்கும்
நடந்து திரிகிறேன்
பக்கத்தே ஓடி வரும்
வக்காத்துக் குளம் உன்
பெயர் சொல்லிப்
பாய்கிறது
வக்காப் பறவை ஒன்று
உன் விலாசத்தை
விசாரிக்கின்றது
பொட்டுப் பூச்சி ஒன்று
உன் போட்டொ கேட்டு
கிட்டத்தில் வருகிறது
நாரை ஒன்று
உன் நம்பர் கேட்டு
நச்சரிக்கிறது
புறாவுக்கு உன்னுடன்
பேச வேண்டுமாம் என்று
புறுபுறுக்கிறது
தூர விலகுங்கள் பட்சிகளே
என்னவள் எனக்கு மட்டுமே
என்று நடக்கிறேன்
பைத்தியமோ இவன் என்று
கொக்கு ஒன்று
கொடுப்புக்குள்
சிரிக்கிறது.
O
பாலம் விடு தூது
கல்லடிப் பாலமே
கொஞ்சம்
நில்லடிப் பாலமே,
என் கவிதைகளை
அள்ளிக் கொள்ளடி பாலமே
இது
உனக்கல்லடி பாலமே..
மெல்லடி வைத்து
காத்தான்குடிக்குச்
செல்லடிப் பாலமே
வில்லடி விழியாள்
விழித்திருப்பாள்..
அவளிடம்
அந்தக் கவிதைகளைத்
தள்ளடி எந்தன்
கல்லடிப் பாலமே...
அவளது மனதை
வெல்லடி பாலமே
நான் படும் பாட்டைச்
சொல்லடி பாலமே
O0
வசந்த அழைப்பூ
காத்தான்குடிக்கு வா
உன்னைக் காதலிக்கிறேன்
கார்த்திகைப்
பூக்களிடம்
கடிதம் கொடுத்து
அனுப்புகிறேன்
குளிர் காலையில் வந்து
உன்னை தழுவிக்
கொள்கிறேன்
குயிலாக வந்து
உன் வாசலில் கூவுகிறேன்
ஊர் வீதியெல்லாம்
உன் பெயரை எழுதுகிறேன்
மஞ்சந்தொடுவாய்
எங்கிலும்
மகரந்தம் தூவுகிறேன்
வா...
000
இயற்கை அனர்த்தம் நீ.
சுற்றி வந்த
சுழல் காற்று நீ,
மனசில் சுழன்றடித்த
சூறாவளியும் நீதான்..
விழிகளுக்குள்
வான் பாய்ந்த
பெருவெள்ளம் நீ.
சுருட்டி எறிந்த
சுனாமிப் பேரலையும் நீதான்.
நெஞ்சில்
பற்றிப் பரவிய
காட்டுத்தீ நீ
காதல் எரிமலை நீ
நீ நிரந்தர நில நடுக்கம்
பூப் போல இருக்கும் பூகம்பம்..
மொத்தத்தில்
நீ ஒரு
இயற்கை அனர்த்தம்..
O 0
பொல்லாக் காதல்
தறித்து விட
நினைக்கிறேன்
துளிர்த்து வளர்கிறது
முறித்து எறிகிறேன்
முன்னிலும்
மூர்க்கமாய் முளைக்கிறது..
பறித்துப் புதைக்கிறேன்
பசுங் குருத்து வருகிறது
எரித்துக் கரிக்கிறேன்
விரித்து கிளை வளர்கின்றது
மறித்துக் கட்டுகிறேன்
மறுபடி மலர்கின்றது
சரித்துச் சாய்த்து விடினும்
சாகவில்லை..தோகை,
விரித்து ஆடி வருகிறது
இனி என்ன செய்ய...
சிரித்துச் சேர்த்துக் கொள்கிறேன்
வேறென்ன செய்ய
இந்தப் பொல்லாக் காதலை...
00
No comments:
Post a Comment