Saturday, February 3, 2024

DHARUL HIKAM-1

காதல் post

 

நான்

உன் கடித உறை.

உன்

நாவினால் தடவி

என்னை ஒட்டி விடு

உன்

இதழ்களால்

ஒரு முத்திரையும் இட்டுவிடு

விலாசத்தை மட்டும்

பிழையாக எழுதி விடு

அப்போதுதான்

மறுபடி மறுபடி

உன்னிடமே

திரும்பி வரலாம்..

0

தீரன்

 

 

எழுந்திரு -3

 

நான் கட்டில்

உன் கட்டுடலை

கட்டிக் கொள்கிறேன்

நான் தலையணை

உன் கூந்தலை

கோதி விடுகின்றேன்

நான் போர்வை

உன்னைப் போர்த்தி

உன்னுடன் உறங்குகிறேன்

நான் கனவு

உன் கண்களுக்குள் வருகிறேன்

நான் நித்திரை

உன்னை தழுவிக் கொள்கிறேன்

நான் அதிகாலை

என்னுடன் எழுந்திரு

0

தீரன்


எழுந்திரு!-1


எழு வானத்துச் சூரியன்
உன்
முகத்தில் விழிக்க வேண்டுமாம்

எழுந்திரு,
இளங்காலைப் பூக்கள்
உன்னிடம் ஏதோ
கேட்க வேண்டுமாம்

எழுந்திரு
காலைப் பனித்துளி
உனக்கொரு
கவிதை சொல்ல வேண்டுமாம்

எழுந்திரு
எனக்கொரு
முத்தம் தா.. 
O

தீரன்

 

சொல்லித் 'தீரா'க் காதல்

ஆருமில்லா இடத்தினிலே
வா, மீண்டும்
என் காதலைச் சொல்கிறேன்

வேருமில்லாச் செடியினிலே
என் காதல்
பூத்த கதையைச் சொல்கிறேன்

ஊரெல்லாம் உலவி அந்த
உளவாளிகள் உருக்குலைத்த
உண்மைக் காதலை
உரைக்கிறேன்.. வா..

நீரெல்லாம் கண்ணுக்குள்
நிரம்பிய
நிஜக் காதலை சொல்கிறேன்

யாரெல்லாம் இதற்கு
உலை வைத்தவர் என்ற
பேரெல்லாம் சொல்கிறேன்

பாரெல்லாம் பறையடித்து
பகிரங்கத்தில் பகிர்ந்து
புரையோடிப்போன
அந்தப்

பழைய பாடலை
உனக்காக...
மீண்டும் பாடுகிறேன்
வா...
O

தீரன்

 

 

எழுந்திரு-2

இரவெல்லாம் உன்னில்
போர்த்திக் கிடந்த
என்னை விலக்கி எழுந்திரு

கோப்பையில் ஊற்றிக்
கொதிக்க வை என்னை

உன்'பால்' சேர்த்து
அன்பால் கலக்கி

ஒவ்வொரு மிடராய்
என்னை சுவைத்து விழுங்கி விடு

வெளியே வா
சூரியனாக வருகிறேன்
உன்னைப் பார்க்க
O

தீரன்

 

 

உச்ச மகிழ்ச்சி

வானமெங்கும்  பறந்து
வார்த்தைகள் சில கொணர்ந்தேன்

புதினமான ஒரு நிறமெடுத்து
பூக்களில் பூசி விட்டேன்

சந்திரனை அடகு வைத்துச்
சவடி கொண்டு வந்தேன்

கடலுக்குள் மூழ்கிக்
கவிதையில் நனைந்தேன்

அன்பே,
உன் குரல் கேட்டதும்..
O

தீரன்

 

 

உமர்கையாமின் உலகத்திலிருந்து..

 

ஆடிக் கொண்டிருங்கள் மிக மெதுவாக

அடிமையே கோப்பையை நிரப்பு..

உத்வேகமுறும் நரம்புகளை ஊடறுக்கும்

இனிய சங்கீதம் ஒலிக்க விடு.

படுதாக்களைச் சுருட்டி விடு

 

என்னவளை வரச் சொல்

அவளது செம்பஞ்சுப் பாதங்களில்

மனது வெறி கொள்ளட்டும்..

நாணரேகை ஓடும் கன்னங்களை

இனியும் பட்டுப் பர்தா

மறைக்க வேண்டாம்

நீக்கிவிடு..

 

என் காதல் முத்தத்தில்

மூழ்கிவிடு...

என் கவிதைகளைக்

காதலிப்பது உண்மையாயின்

நீ மட்டும் வந்துவிடு அன்பே!

0

தீரன்

 

தங்கநகைமாளிகை நீ

 

தோளுக்கு மேலே

தொட்டுப் பார்க்கும் தொங்கட்டான் நீ

உன் காதுகளில் தூக்குப்போட்டுத்

தொங்கட்டா நான்..?

 

மார்புக்குள் மறைந்திருக்கும்

தங்கச் சங்கிலி நீ..

அதன் மடிப்புக்குள்

மூச்சுத்தட்டும் பைங்கிளி நான்

 

தாக்கத்தி மூக்கில் மின்னுகிற

மூக்குத்தி நீ..அதன்

தாக்கத்தில் பறந்து வரும்

மனங்கொத்தி நான்..

 

கையைச் சுற்றிக் கட்டிய

கைப்பட்டி நீ

உன்னைக் கைப்பற்றிக்

கவிதை எழுதும் மைப்புட்டி நான்

 

22 கரட்டுத் தங்கம் நீ

28வயது முரட்டுச் சிங்கம் நான்..

சங்குக்கழுத்தில் தொங்கும் தாலி நீ

உன்அங்கம் முழுதும்

எழுத்தில் எழுதும் வாலி நான்..

 

உனக்குச்

செய்கூலி சேதாரம் இல்லை

நீ இன்றேல் எனக்குக்

கைக்கூலி ஆதாரம் இல்லை..

 

அஞ்சு விரலிலும் அணியும் மோதிரம் நீ..

அந்த விரலைக் காதினுள் விட்டு

அஞ்சு ஒகுத்தும்

உன் பெயர் பறியும் மோதினார் நான்.

 

காப்புப் போட்ட கவிதை நீ ..

உனக்கு யாப்புச் செய்த

கவிஞன் நான்.

 

உன் காதினில்

மின்னி மின்னித் தூக்கு

நீ இல்லையேல்

அதை எண்ணி எண்ணி

என் கழுத்தினில் தூக்கு.

0

தீரன்

 

 

வக்கிர வதை

 

வெட்டிய மின்னலை

விழிகளில் ஏந்துகிறேன்

கொட்டிய நெருப்பினை

கொதிப்புடன் விழுங்குகிறேன்

 

திட்டிய மொழியெல்லாம்

திகைப்புடன் சகிக்கின்றேன்

முட்டிய மோதலை

முழுதாய் தாங்குகிறேன்

 

குட்டிய போதெல்லாம்

குனிந்தே இருக்கிறேன்

எட்டியவள் உதைத்த போது

எல்லாம் வாங்குகிறேன்

 

வெட்டிய கபுருக்குள்

வைக்கும் நேரமிதோ

யானறியேன்..

0

தீரன்

 

 

கடைசிவார்த்தை

 

கள்ளப் பார்வையால்

காற்றைக் கொளுத்தி எறிந்தாய்..

அக்கணத்தில்

காணாமற் போனேன் நான்..

 

நான் அணிந்திருந்த

கனவைக் களவெடுத்து

அதில் புன்னகையால் ஒரு

பூவேலைப்பாடு நெய்தாய்

 

இன்னும்

பூக்களால் ஆன ஒரு

பூகம்பம் செய்தாய்

அதைப் போர்த்தி உறங்கினேன்

 

காணாதென்றா

கடித உறைக்குள்- ஒரு

கண்ணிவெடி வைத்தும்

அனுப்பினாய்..

 

என் கல்பு சிதறிக்

கவிதைத்தூள் ஆனது

கடைசிவார்த்தை

ஒன்று சொன்னாய் பார்

 

என் வானம்

உன் காலடியில்

நொறுங்கி விழுந்தது..

0

தீரன்

 

 

தீராசந்தேகம்

 

கொத்துக் கொத்தாய்ப்

பூத்தீரா மலர்களே..

மனதைப்

பித்துப்பிடிக்க வைத்தீரா..

 

அதிவிடியலில் தீரா தீரா என

என்னை அழைத்தீரா..

நாடி வந்தொரு பூச்சி

தீராக் காதலைச்

சொன்ன போதினில்

நாணத்தால் சிவந்தீரா..

 

வர்ணங்களை

வானில் உதறிப் பறந்தீரா..

ரசித்துத் தீரா

உம் அழகை நோக்கிப்

பறந்து வந்த ஒரு

பருந்தைப் பார்த்துச் சிரித்தீரா..

பாதை மறந்தீரா

 

பூச்சியின் மென்மை

பருந்திடம் எதிர்பார்த்தீரா..

சொல்லித் தீரா என்

சோகத்தைக் கேட்டு

விழிகள் சொட்டுப்

பனித்தீரா..?

0

தீரன்

 

நிராசை

 

நீ முடவன்....

அதுகொம்புத்தேன்...

ஏற முயலாதே....

 

நீ குருடன்

அது எழில் ஓவியம்

பார்க்க முயற்சிக்காதே..

 

நீ ஊமை

அது மெல்லிசை

பாடப் போகாதே...

 

நீ மூளி

அது முழு சிற்பம்

செதுக்க நினையாதே..

 

நீ எறும்பு

அது வெண்ணிலவு

அன்னார்ந்து பார்த்து

ஆறுதல் கொள்..

 

அவ்வளவுதான்...

0

தீரன்

 

 

 

வலி

 

ஆறாத காயம் இது

ஆகுமா உனக்கு..

 

ரணம் தாக்கி

ரத்தம் வடிவதை

ரசிக்கின்றாயோ..

 

நிணம் வடிந்து

நனைவதை நினைத்துச்

சிரிக்கின்றாயோ

 

உச்ச வேதனையின்

உளரல்கள்

உனக்குச் சம்மதமோ..

 

உள்ளிருந்து உருகும்

ஆத்மாவை வதைப்பாயோ

 

இன்னும்

என்ன செய்ய உத்தேசமோ..

கைதூக்கி அணைத்துக்கொள்

அன்றேல்

வெந்நரகில் விட்டுவிடு..

0

 

 

வாழ்த்துக்கள்

 

வாழ்த்துச் சொல்ல ஒரு
வண்ணப் பூங்கொத்து
வாங்கி வந்தேன்
வாசலுக்கு..
வரவேற்கவில்லை நீ

உன் முற்றத்தில்
ஒரு கோலமிட்டு
மூன்று புள்ளி வைத்தேன்
மொத்தத்தில்
அள்ளி எறிந்து விட்டுச்
சென்றதுமேனோ...

என்
கவிதையைக் கூடக் கேட்காமல்
ஏனோ
கதவுகளைச் சாத்தினாய்

ஒரு
புன்னகை கேட்டதற்காகவா
இப்படிப்
புண்படச் செய்தாய்..
0

தீரன்

 

 

அகத் தீ

 

கொழுத்திப் போட்டது

கொழுந்து விட்டெரிகிறது

 

தீபமாய் எரிந்தது,

தீப்பற்றிக் கொண்டது

 

சுடராய்த் தொடங்கியது

சூழ்ந்து பற்றிப்

பரவி விட்டது.

 

சில காலம்

நீறு பூத்திருந்தது

இன்று

நெருப்பாய் எரிகிறது

 

காழ்ந்து எரிந்து, மனக்

காடு முழுவதும்

கருகி விட்டது

 

தணியாமல்,

கனன்று கொண்டே இருக்கிறது,

 

உன்னைப்,'பற்றி'

-N-னில் பற்றிய

நினைவுப் பெரு நெருப்பு.

0

தீரன்

 

 

 

லூசுப்புலம்பல்

 

உன் வீட்டு வாசலில்

ஒரு காதல் துளசி நான்

 

உன் நந்தவனத்தில்

ஒரு வண்ணாத்திப் பூச்சி நான்.

 

உன் தோட்டத்தில் பாடும்

ஒரு குயிலும் நான்

 

உன் உள்ளங்கை நடுவே

ஒரு மருதாணிப் புள்ளியாய் நான்

 

உன் மனதில்

வெள்ளமாய்ப் பொழிகிற

தமிழ் மழை நான்

 

இருந்தும்,

வா என்பதற்கு

போடா என்று அர்த்தமோ உன்

பொல்லாத அகராதியில்..?

0

தீரன்

 

 

பூ

 

வானமெங்கும் பறந்து

வார்த்தைகள் சில

கொண்டு வருகிறேன்

 

புதினமான ஒரு நிறமெடுத்து

பூக்களில் பூசி விடுகிறேன்

 

சந்திரனை அடகு வைத்துச்

சவடி  ஒன்றும்

கொண்டு வருகிறேன்

 

உன் நினைவில்

தினமும் அழிந்து

நீ  -N- நீரூற்றில்

மறுபடியும் பூக்கின்றேன்..

O

தீரன்

 

 

 

போர்த்திக்கொள்

 

மேகமெனத்  திரள்கிறாய்

மனசெல்லாம்

மண்வாசம் வீசுகிறாய்

 

பின்

மெதுவாய் வந்து

என் முற்றத்தில்

காதலாகப் பொழிகிறாய்

 

ஈர உதடுகள் நடுங்க

காதலில் குளிர்கிறேன்

உன் மார்பின்

வெம்மைக்காக ஏங்குகின்றேன்

 

என்னைப் போர்த்திக் கொள்..

வா

என்னைப் போர்த்திக் கொள்..

 

 

0

கறுப்பு வெள்ளைப் பூ

 

நீ கறுப்பு வெள்ளைப் பூ
நீ
உள்ளங்கையில்
உட்கார்ந்த உகப்பு
மனதில் மலர்ந்த மகிழ்வு

நீ
உதட்டில் ஊறும் சிகப்பு
மார்பில் அடங்கும் மதர்ப்பு..

நீ
மனசுக்குள் வெடிக்கும்
காதல் மத்தாப்பு
கண்ணுக்குள் பூத்திருக்கும்
கறுப்பு வெள்ளைப்பூ

நீ
கோபித்திருக்கும் கொய்யாப்பழம்
என்னிதழால் கொய்யாப்--பழம்

நீ
கட்டிப்பிடிக்கும் காந்தம்
எட்டிப்பிடிக்கும் மின்சாரம்

உன் நினைவு இன்றி
நான் நானில்லை...
உன் எண்ணமின்றி
நாள் நாளில்லை..
0

தீரன்

 

 


பரவசம் உன்வசம்

வானத்திலிருந்து
வர்ண மழைத்துளிகள்
பொழிந்தன..


மண்ணில் ஆயிரம்

மல்லிகை மணத்தது
மனசு நிறைய

மத்தாப்பு பூத்தது


சங்கீதம் பாய்ந்து
காதெல்லாம் இனித்தது
காற்றில் மிதந்து
கனவுக்குள் ஆழ்ந்தேன்
கண்ணே

உன் குரல் கேட்டதும்..

0

தீரன்

 

 

உன் குரல்

 

காற்றுக்கு இசை பூசி

காதுக்குள் புகுந்தது உன் குரல்

 

சின்னச் சிரிப்பூக்கள்

செவிக்குள் பூத்துச் சிரித்தன..

 

ஜானகி ஒரு காதிலும்

சுசிலா மறு பக்கமும்

ஜாலம் செய்யும் கோலம்..

 

இசை வித்தை செய்து

என்னை

அசைவித்த மந்திரம் உன் குரல்.

 

தேனுக்குள் குழைத்து

போனுக்குள் ஊற்றிய புனல்

உன் குரல்

 

உன் குரலை அருந்தி

தாகம் தீர்க்கிறேன்

O

தீரன்

 

 

 

வாசலில் பெய்யும் மழை

 

உன் வாசலில் வந்து

மழையாய் பொழிகிறேன்

 

உன் தோட்டத்தில் ஒரு

பூவாய் மலர்கிறேன்

 

உன் வீட்டுக்குள் ஒரு

தும்பியாகப் பறந்து வந்து

உன்னைச் சுற்றுகிறேன்

 

உன் விழியிஈர்ப்பு விசையில்

சிக்கி

விழி பிதுங்குகிறேன்

 

சும்மா போ,

நீ இயற்கை அழகு

0

தீரன்

 

 

மல்லிகை

 

உன் மேனியில்

என்னைப் பதியமிடு

ஒரு நூறு

மல்லிகையாய்

மலர்ந்து மணப்பேன்.

 

உன் மார்பில்

என்னைப் படரவிடு

உன்னைத் தழுவிக் கொண்டு

உன் காதுகளில்

ஓராயிரம் கவிதை சொல்வேன்

0

தீரன்