Tuesday, June 30, 2015

கறுப்புப் பறவைகளோடு கதைத்திருந்த காலங்கள்



கறுப்புப் பறவைகளோடு 
கதைத்திருந்த காலங்கள்............


ஒரு சுய புலம்பல்...
   
    இப்படித்தான் 1980 களில் ஆர்.எம். நௌஸாத்- எஸ்எம்.எம். றாபீக்- கல்முனை அபு- கல்முனை ஆதம்- ஏ.எல். கபுர்.- எம். வை. நஜீப்கான்- பாண்டியுர் நாகராஜா கல்முனை கலீல்  ஆகியோர் சேர்ந்து கல்முனை புதிய கவிஞர் வட்டம் (கல்முனை புகவம்) என்னும் அமைப்பினைத் தொடங்கினோம். 1983ல் தொடங்கி 1989 வரை ஆறு வருடங்கள் தூது என்ற பெயரில் ஒரு கவிதைச் சிற்றேடு ஒன்றினையும் வெளியிட்டோம். அது ஒரு பொற்காலம்தான்..

    கண்களில் நிறையக் கவிதைக் கனவுகளோடு களமிறங்கிய எம்மை  அப்போதிருந்த மூத்த கவிஞர்கள் கண்டு கொள்ளவேயில்லை. அவர்கள் தந்த தொல்லைகள் நக்கல்கள் வேறு... எல்லாவற்றையும் தாண்டி தூது கவியேட்டை அச்சில் 16 இதழ்கள் வரை வெளியிட்டோம்..

    அந்த ஆறு வருட காலங்களிலும்... அப்பப்பா.. எத்தனையெத்தனையோ  கவிஞர்கள்.. கவிதைகள்.. பிரசுரங்கள்.. கபடப் பறவைகளான எழுத்தானர்கள்.. நயவஞ்சகப் புலவர்களைப் பார்த்தாயிற்று..  இப்போது 2013ல் ஏறக்குறைய 33 ஆண்டுகளுக்குப் பின் இவற்றை மீட்டிப் பார்க்கும் போது நமக்கே கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது..

    சமீபத்தில் ஒருநாள் இரண்டாம் விஸ்வாமித்திரனோடு பேசிக் கொண்டிருந்த போது  தான் தனது பழைய படைப்புக்களை பதிவுகளாக மேற்கொள்ள முடியாமலிருப்பதாக ஆதங்கப்பட்டார்.  என்னையும் இதுவரை எழுதியுள்ளதை ஆவணப்படுத்தி வைக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

    அதன்பேரில் இதுகாலவரைக்கும் நான் எழுதிய கவிதைகளில் கைவசமுள்ளதை ஒரு குத்து மதிப்பாக எண்ணிப் பார்த்த போது  எல்லாம் சேர்த்து சுமார் 456 கவிதைகள் தேறின. இருந்தும் நம்மை ஒரு கவிஞனாக  யாரும் மறந்து போய்க் கூட எங்கும் குறிப்பிடுவதாகக் காணவில்லை.. எனவேதான்  நமது கவிதைகளை ஒன்று சேர்த்து ஒரு சிறிய தொகுதி யாகவாவது கொண்டு வரல் வேண்டும் என்று ஒரு ஆதங்கத்தின் காரணமாகவும்  1983களின் கவிதைப் பிரசுரங்கள் வெளியீடுகள் பற்றிய தகவல்களை மற்றும் அந்த ஆரம்பகால போர்க்கால அனுபவங்களை கோர்த்துக் காட்டும் ஒரு சிறிய கறுப்பு-வெள்ளை  அல்பமாகவும் இத்தொகுப்பினை முன் வைத்தேன்.

    இந்த 33 வருடப் பழைய அல்பத்தில் ஒரு சில கலர்ப்படங்களையும் ஆங்காங்கு சேர்த்து இதனைத் தொகுத்தேன்.  2013 சனவரியில் எழுதத் தொடங்கிய  சில கவிதைக் குஞ்சுகள் பெப்ரவரியிலேயே ஒரு கவிதைநூல் போட்டு  மார்ச் மாதத்தில் ஒரு சிரேஷ்ட கவிஞராக மாறி மேடைகளில் ஊடகங்களில் கவிதைச் சிந்தனைகள் கழிறுகின்ற இந்தக் காலத்தில் இந்தக் கவிதைத் தொகுதி  (ஒண்டுக்கும்) விலைப்போகாதுதான். அதற்காக நான் என் பதிவை  மேற்கொள்ளக் கூடாதா என்ன..?

    எனவே  1983 தொடக்கம் 1989 வரையிலும் நாம் வெளியிட்ட தூது கவிதைச் சிற்றேட்டிலிருந்து சில தகவல்களை ஆய்வாளர்களுக்காகவும் ஏனையோருக்காகவும் தொகுத்துள்ளேன்.

    தூது வெளியான 6 வருட காலத்திலும் அதில் மரபு- புதுசு- ஹைக்கூ- குறும்பா- வெண்பா- எண்சீர்- வசன கவிதை நெடுந்தொடர் கவிதைகள் என்று ஏராளமான கவிதைகள் வெளியாகியுள்ளன. ;-தூது இதழின் ஆசிரியத் தலையங்கம் பரிமாற்றம் என்ற தலைப்பில் கவிதை வடிவங்களிலும் வசனவடிவிலும் எழுதப்பட்டுள்ளதோடு தூதில் இலக்கியத் தகவல் பகுதியாக  காதோரம்-  வாசகர் கடிதங்களுக்கு மடல்விடு தூது  தமிழக கவிதைகளின் மறுபிரசுரத்திற்காக பாலம் என்ற பகுதி- நூல் விமர்சனம் எழுத தராசு- என்ற பக்கம்- இலக்கிய நிகழ்வுகளுக்கு -டைரி- என்ற பகுதி இப்படிச் சில...
   
    மற்றும் கவிதைப் போட்டிகள் குறும்பா போட்டிகள் கவியரங்குகள்- அந்தியில் சந்திப்போம் என்ற  பூ”ரணைதின மாதாந்த இலக்கியச் சந்திப்புக்கள்... நூலறிமுக- விமர்சன விழாக்கள்.. இப்படி ஏராளமான சங்கதிகள் வேறு...

    மற்றும்- புள்ளி என்ற பேருடன் ஈழத்தின் முதல் ஹைக்கூ கவிதைச் சஞ்சிகை.  அன்புடன்- என்ற பேரால் ரோணியோ சஞ்சிகை- இனக் கலவரக் கசப்புகளைச் சுமந்த இன்னாலில்லாஹி- என்ற பல

கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு- பலஸ்தீன இஸ்ரேல் ஒப்பந்தம் குறித்த வாஸஷிங்டன் கனவு- என்னும் போட்டோ பிரதித் தொகுப்பு- மெஹ்ருன் நிஷா றிஸாத்தின் -விடியலை நோக்கி அவனுக்காக- என்ற புதுக்கவிதைத் தொகுப்பு இப்படிப் பல நூலாக்கங்கள்....

    இவை தவிர தூது வெளியிட்ட அந்த 6 வருட காலத்திலும் ஏற்பட்ட இலக்கிய அனுபவங்கள்.. முதலாம் தூதை  நண்பர் கல்முனை முபாறக்கின்  அச்சகச் சாதனங்களைக் கொண்டு  நாமே அச்சுக் கோர்த்து  கேஸில் அடுக்கி அதை கல்முனை மொடர்ன் அச்சகத்திற்கு  என் தந்தையின் கறுப்பு மொரிஸ்மைனர் காரில் கொண்டு சென்று  கூலியாக ரு 35 கொடுத்து அச்சடித்ததும்... 

   வெறும்’ 6 பக்கம் கொண்ட இக்கவிச் சிற்றேட்டை மறைந்த தலைவர் அஸ்ஷ்ரப் அவர்கள் வீதியில் வைத்து ரு 100 தந்து வாங்கி வாசித்ததும்- 

   தமிழீழப் பிரசுரம் என்று கல்முனை பொலிசில் மாட்டி ஒரு புண்ணியவானின் உதவியால் விடுவிக்கப்பட்டதும்... 

    பாவலர் பஸீல் காரியப்பரின் ஆலோசனைகளும்...  வெளியான ஒவ்வொரு இதழையும் ரு 5 தந்து வாங்கி வாசிக்கும் என் தாயாரின் ஊக்குவிப்புகளும்... ஏராளமான எழுத்தாள நண்பர்களும்...

     பாடசாலைப் படிப்பு பற்றிய சிந்தனையின்றிச் சதாவும் இலக்கியச் செயற்பாடுகளும்.. வாசிப்புகளும்..எழுத்துகளும்.. இடையிடையே ஊடுருவுகிற நயவஞ்சக நச்சுப் பாம்புகளின் நக்கல்களும்... அம்மாhடீ..

    இந்த 2014ல் 33 வருடங்களின் பின் இவற்றை பின்னோக்கி மீட்டிப் பார்க்கின்றபோது  வெகு ஆச்சரியமாகவே உள்ளது..

-2-

1வது தூது- (1983 ஓகஸ்ட்) காணிக்கை ரு1.   

    தூது முதலாவது இதழில் கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்- ஜூல்பிகா nஷஷரீப்- ”பால் கதிரவேல்- மஷூஷ_றா மஜீட்- றாபீக்- கள்ளொளுவை பாரிஸ்-  ரஸீஷீட் நூறுல் ஐன்- தீரன்- நஸீறா லாபீர்- ராதா வேல்முருகு- அல்வை சயானந்தன்- உதயா அம்பலவாணி- அபுஇம்தியாஸ்- கலாவிஸ்வநாதன்- ஆகியோரின் 17 கவிதைகள் வெளியாகியிருந்தன..  அதன் காதோரம் பகுதியில் காவலூர் ஜெகநாதனின் மாருதம்- என்.பி. கனகலிங்கத்தின் சந்திப்பு- கணமகேஸ்வரனின் தாரகை- ஆகிய சஞ்சிகைகளின் அறிமுகங்கள் இடம்பெற்றன.

2வது தூது- (1983- நவம்பர்)

    இதில்- மெஹ்ருன் நிஸா ரிசாத்- ரஞ்சினி சரவணமுத்து- குறைஷா முகைடீன்- நிலாதமிழின் தாசன்- ஏஎம்.எம். நஸீர்- அ.கௌரிதாசன்- றாபீக்- கல்முனை கலீல்- இப்னுஅஸ_மத்- சிறிதேவகாந்தன்- சித்தி ஜெரினா கரீம்- ஆகியோர் எழுதியிருந்தனர். காதோரம் பகுதி இடம்பெறவில்லை.

3வது தூது--(1984 பெப்ரவரி)

    இவ்விதழில் சுலைமா ஏ.ஷமி- பாண்டியுர் நாகா- பாவலர் பஸீல்காரியப்பர்- கல்முனை ஆதம்- தம்பிலுவில் ஜெகா-  எம்.ஏ. ரஹிமா- கட்டுகொட மஸீஷீதா ஹம்சா- பாத்திமா மைந்தன் - நற்பிட்டிமுனை பளீல்-  முருகு அஷ்ஷ்ரபா நூர்டீன் போன்றோரின் கவிதைகள் வந்திருந்தன.

4 வது 5வது தூது (1984-  மே-ஓகஸ்ட்)- ஆண்டுமலர்.

    இவ்வாண்டு மலரில் செ.குணரத்தினம்-  பாலமுனை பாறுக்-  மேமன்கவி-  எச்.ஏ. அஸீஸ்- திக்வல்லை ஸப்வான்- மஸீதா ஹம்ஸா- அன்பிதயன் சிறாஜ்- நி. இராஜம் புஷ்பவனம்-  அறநிலா- கலைலங்கா- நஸீறா அன்சார்-  இக்பால்கான்- மருதூர் ஜமால்தீன்- பாரிஹா- எம்.எம்.எம். நகீபு-  தர்ஹாநகர் ஷாரா- இவர்களுடன் முன் கூறப்பட்ட பலரும் எழுதியிருந்தனர்.  காதோரம் பகுதி  மரபு- புதுக் கவிதைகளின் பயன்பாடு பற்றிப் பேசியது. இதுவரை வெளியான தூது இதழ்கள் பற்றிய ஒரு விமர்சனத் தொகுப்பை மேமன்கவி விமர்சித்திருந்தார்.  இதுவரை மொத்தமாக பிரசுரிக்கப்பட்ட 41 கவிதைகளில் 5 மட்டுமே கவிதை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும்-

பார்வை பகுதியில்-  சில சஞ்சிகைகளின் அறிமுகம் உள்ளது..  தர்காநகர் ஸபாவின் சந்தம்- நூறுல்ஹக்கின் சோலை- க.தணிகாசலத்தின் தாயகம்- மசுறாமஜீதின் நிறைமதி- இம்மானுவேல் புஷ்பராஜனின் காற்று-  க.ஐ. யோகராசாவின்  இந்துமதி- சந்தியோ அமிர்தராஜாவின் இதயசங்கமம்- 

    தராசு என்ற நூல் விமர்சனம் பகுதியில்  கலைவாதிகலீலின் -கருவறை யிலிருந்து கல்லறைக்கு- விமர்சனத்தை ஞானக்கண்ணன் எழுதியிருந்தார். மற்றும் இவ்விதழில் 83 ஆடிக்கலவரத்தில்  உயிரிழந்தோருக்கும் கவிஞர். ஈழவாணனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

6வது தூது- 1985 ஜனவரி)-

    முன்னைய இதழ்களில் எழுதிய 12பேரின் கவிதைகளுடன் தற்கால பொதுக் கவியரங்ககளில் கவிஞர்கள் ஒருவரையொருவர் வசைபாடும் கீழ்த்தர இயல்புக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துப் பயங்கரம் நிலவிய காலத்தில்  மட்.கத்தோலிக்க அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.

7வது தூது- 1985- ஏப்ரல்)- 

    அபாபீல் என்ற பறவையின் இறகுவிரித்து எழும் தோற்றத்துடனான தூது புளக். செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.. இவ்விதழில்  கலையன்பன் ரபீக்- வழைச்சேனை அமர்- கலைமகள் ஹிதாயா மஜீட்- எஸ் கமர்ஜான்;பீபி-   ஏ.எல். க”ர்- ஆகியோர் எழுதியிருந்தனர்.  17.03.1985ல் காலமான  நாவலர் ஈழமேகம் பக்கீர்தம்பி அவர்களுக்க அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  பரிமாற்றம் எனும் ஆசிரியர் தலையங்கத்தில் எழுத்தாளர் நலன் வங்கி ஒன்றினை ஆரம்பிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இக்காலப் பகுதி ரோணியோ  இலக்கியச் சிற்றேட்டுகளின் காலம்..  அவற்றில் கிடைக்கப் பெற்றவைகளாக- தடாகம் (அன்பிதயன் சிறாஜ்- கலைமகள் ஹிதாயா)- ” (றிஸ்ஷ்மி மஜீட்-மாஹிர்) மருதம் (கமர்ஜான்பீபி- மருதூர் ஜமால்தீன்) அன்புடன் (சித்ரா -ராஜகவி- பாவலர்தாசன்)  வகவம் (மேமன்கவி)- யதார்த்தம் (அஸீஸ் நிஸாருத்தீன்) ஞெகிழி (நவாஸ் ஏ. ஹமீட்) அக்கினி (மசுறா.ஏமஜீட்)  அலைஓசை (உடப்”ர் வீரசொக்கன்)  இளமதி (வாழை.அமர்) காற்று (புஸ;ஷ்பராஜன்)  உடைப்பு ( அஸ்மி-ஜவ்பர்) என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.  இந்தக் காலத்தில்  இணையத்தில் புளக் ஸ்பொட்டுகள் (டீடழபளிழவ) செய்கிற வேலையை  ரோணியோக்கள் செய்தன..

8வது தூது1985 ஜீலை.

    இவ்விதழிலிருந்து ஆசிரியர் தலையங்கத்தை நான் கவிதை (குறும்பா) வடிவில் ஆரம்பித்துள்ளேன்..   பாரினையே இனக்கலவரம் மூடும்- பத்திரிகைச் சுதந்திரங்கள் ஓடும்- புதுப்புரட்சிக் கருத்துக்களையே பிரசுரிக்க மிகத் தடைகளும்- படைப்போர் மனங்களிலே ஆடும்.

    இந்த இதழில்- ஷுஷீக்னா லாபீர்- மருதூர் மெய்யொளி- நவாஸ் ஏ. ஹமீட்- உட்பட 11 பேர் எழுதியிருந்தனர். மறுபிரசுரக் கவிதையாக ஓட்டமாவடி அஷஸ;;ரபின் (அஷ்ஷ்ரப் சிகாப்தீன்) எட்டப்பன்-  பிரசுரமானது. இவ்விதழ் 22.03.1985ல்  காலமான நாடக நெறியாளுனர் கே.எம். வாசகருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

9 வது தூது- 1985 நவம்பர்) 

    இலக்கியப் பாதையில் மூன்றாம் வருட மைல்கல் என்ற கொட்டெழுத்து க்களுடன் வெளியான இவ்விதழில ஆசிரியர் தலையங்கத்தை  வெண்பா வடிவில் செய்து பார்த்தேன். 

ஈர்ப்பில்லை காப்பில்லை யாப்பில்லை உப்பில்லை -- 
யாக்கின்றார் யாரிவர் ஆசிரியர் - றோணியோப்-- 
பேப்பரில் பார்ப்பது நாற்பது பெண்பெயர்- 
ஊர்க்கிது சேர்க்குமா புகழ்...?-

    இவ்விதழில் சாரணா கையும்- யாழ் ஜெஸீலா முகமட்- நஸீலா மீராமுகைடீன்- எம்.ஐ.எம். சுபைர்-  உட்பட மேலும் பலர் எழுதினர். குறிப்பாக எச்.ஏ அஸீஸின்  போதி மரத்தின் கீழிருந்து... என்ற கவிதையை இக்காலத்துக்கும் பொருத்திப் பார்க்க் கூடியதாகவுள்ளது ஓர் ஆச்சரியமே..  அதிலிருந்து சில வரிகள்--  ----- பள்ளிவாயிலா யாருக்கு..? நாளைய பெரஹர தொடங்கும்  அங்குதான்...-- எல்லாம் இழந்து -- எல்லாம் இழந்து அரச மரத்தின் விதைகளைத் தூவும் காக்கைகளுக்கு  அழைப்பு விடுங்கள்- உங்கள் தலையிலும் ஒன்றைத் தூவக் கூடும்- சந்தோஷம்தானே...- கசாப்புக் கடைகளைத் திறந்தே வைத்திருங்கள்..

10வது தூது (1986 ஜீன்.)

    இவ்விதழ் மூன்றாண்டுப் ”ர்த்தி மலராக அமைந்தது. லிபிய மக்கள் மீது அமெரிக்கா வீசிய குண்டுத்தாக்குதலில் பலியான அப்பாவி டியுனீஸிய மக்களுக்கும் 23.03.1986ல் மறைந்த எழுத்தாளர்  டானியல் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  கவிதைப் போட்டி முடிவுகளும் வெளியாகியுள்ளது. நடுவர்களாக அல்அஸீமத்- மேமன்;கவி- வீ. ஆனந்தன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.  1ம்பரிசு- ஏஎம்எம். நஸீரின் ? (கேள்விக்குறி)  - 2ம் பரிசு நிதானிதாசனின் சமாதானத்தின் தலைமறைவு 3ம் பரிசு  நஸீலா மீராமுகைடீனின் வாஷிங்டன் மீசையம் பாபுஜியின் ராட்டினமும் மற்றும் மசுறா மஜீதின்  வடுக்கள் ஆறுவதில்லை. என்பன தெரிவாகியிருந்தன..

    இவ்விதழில் வாசுதேவன்.- ரஹ்மான். ஏ.க”ர்- யாழ் ஜெஸீலா- அடிமை- நிஹாரா ஷரிப்டீன்-  இளைய கலீபா- என்று மொத்தம் 21 கவிஞர்கள் கவிதை யாத்திருந்தனர். 

    என்னதான் 10 இதழ்கள் வரை வெளியிட்டாலும்  இச்சமயத்தில் எமக்கு ஒரு இலக்கிய அலுப்பு- ஏற்பட்டிருந்தது.. மூத்த கவிஞரின் நரகல் நக்கல் விமர்சனங்கள்.. பொருளாதார நெருக்கடி.. தரமான கவிதைகள் கிடைக்கப் பெறாமை.. ஆகியன இந்த அலுப்பின் பின்புறக் காரணிகள்.. ஆயினும் கவிஞர் அல்.அஸீமத்  எமக்கு ஒரு உயிர்மாத்திரை தந்து ஊக்குவித்ததை மறக்க முடியாது... அவர் அச்சமயத்தில் எமக்கெழுதிய குறும்பா இது--  தூதே நீ நேர்வழியில் கற்பாய்- தூயானின் வார்த்தைகளில் நிற்பாய்- துருப்பிடித்த புண்மைகளை- தூக்கியெறி வெந்நரகில்- தோள்கொடுப்போம் யாமுள்ளோம் நட்பாய்.

11வது 12வது  தூது (1987 ஜனவரி-ஏப்ரல்)

    உள்நாட்டுப் போர்மூர்க்கம் மிக்கதான காலம் இது.. அடிக்கடி நடக்கம் ஹர்த்தால் கடத்தல்கள் காரணமாக அச்சகத்திற்குச் செல்ல முடியாத நிலை.. எனவே 11ஆவது 12ஆவது இதழ்களை ஒன்றாகச் சேர்த்து வெளியானது.  தீவிர யுத்தம் காரணமாக அதற்கேயுரித்தான கவிதைகள் இடம்பெற்றன. மொத்தம் 41 கவிதைகள்..  எச்.ஏ. அஸீஸின்  5 கவிதைகளுடன் அவரது  ளுசடையமெயn யளா வசயல யனெ நவாniஉ உபையச  என்ற புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை இடம்பெற்றது.. ஆரையம்பதி  ஈஸ்ரன் ஓட்டோ அச்சகத்தில் பாதி வேலை முடிந்த தறுவாயில் அச்சக உரிமையாளர் கப்ரியல் இனம்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    பல நாட்கள் கழித்து மிகுந்த சிரமத்தின் பேரில் ஆரையம்பதியில் ஒரு இயக்கப் போராளியிடம் முறையிட்டதன் பேரில் அச்சகத்தை  பலவந்தமாகத் திறந்து பார்த்தபோது தூது முழுவதும் அச்சடிக்கப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. ஏனைய பிரசுரங்கள் முழுவதும் கப்ரியலின் இரத்தத்தில் ஊறிப் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியானோம்.  அதைத் தொடர்ந்து மற்ற இயக்கப் போராளிகளால்; நாம் விசாரணை என்ற பேரால் பட்டபாடும் அலைச்சலும் தனி ஒரு நூலாக எழுதப்படக் கூடியது..

13வது தூது (1987 ஜீலை)

    இந்திய அமைதிப்படையின் அட்டுழியம் குறித்த குறும்பா வடிவ தலையங்கத்துடன் வெளியான இவ்விதழில்   மொத்தம் 11 கவிதைகள் வந்திருந்தன.. ஆனால் நான்கு பேரே அனைத்தையும் எழுதினர். (அஸீஸ்-தீரன்-நகீபு-நஸீர்.) அத்துடன் விமர்சகர் கே.எஸ் சிவகுமாரன்  27.05.1987 ல் வாந ஐளடயனெ ல் எழுதிய தூது பற்றிய  யு சநஅயசமயடிடந அயபயணiநெ என்ற குறிப்பு உள்ளது. இவ்விதழ் மட். கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

14வது தூது. (1988 மார்ச்)

    புகவம் எட்டாண்டு நிறைவையும் தூது ஐந்தாண்டு ”ர்த்தியையும் முன்னிட்டு சற்றுப் பெரியளவில் ஒரு கவிதை மலராக வந்த இவ்விதழ்  சமாதான ஒப்பந்தத்தின் பின் சாம்பலாகிப் போன நபிகளின் உம்மத்துகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியத் தலையங்கம்  

புலிப்படை அடிப்படை  வெளிப்படை தனியீழம்
அதிர்படை அடிப்படை ஒருகுடை சிறிலங்கா- 
அமைதிப்படை முனைப்படும் திருமலைத் துறைநகர்- 
ஜிஹாத்படை உருவடைத் தேவை....- 

 என்று  தமிழ்ப்படை-சிங்களப்படை-இந்தியப்படை- என்று படை மயமாக இருக்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு படையுமில்லை.. பட்டாளமுமில்லை.. எல்லாப்பக்கத்தாலும் பாதிப்படைந்ததால் நமக்கும் ஒரு பாதிப். படையாவது உருவாக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் வெண்பாவில் எழுதப்பட்டது..

    மொத்தம் வெளியான 21 கவிதைகளில் புதியவர்களான ஜவ்பர் காரியப்பர்- மதுரம் பியாஸ்- எம்;.ஏ. மாறன்- எம்.வை. நஜீப்- கஸ்ஸ்லி அஸ்ஷம’ஷஸ்- மதிமகன் ஜாபிர்- ஆகியோரும் எழுதியிருந்தனர்.  புகவம் எட்டாண்டு நிறைவையும் தூது ஐந்தாண்டு ”ர்த்தியையும் முன்னிட்டு குறும்பா போட்டி ஒன்றுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.. .வ்விதழில் பாலமுனை பாறுக்கின் பதம் -  தர்ஹாநகர் ஸ-லைமா சமியின் வைகறைப் பூக்கள்-  ஆசுகவி அன்புடீனின் முகங்கள்- நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது சாய்நதமருது நஸஷனல் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.


15வது தூது (1988- ஒக்டோபர்) --

    வாசகர் எவரும் இதுவரைக்கும் பணமனுப்பாததால் இவ்விதழ் முற்றிலும் இலவச வெளியீடாக வந்தது. இக்காலத்தில்  புலிகளுக்கும் இந்திய அமைதிப்;படைக்குமிடையில் உச்சக்கட்ட மோதல் இருந்தது. இந்த இதழில்-   வீ. ஆனந்தனின் -புதிய பரதீஸ்- பாவேந்தல் பாலமுனை பாறுக்கின் -அனுமான்களை அழைத்துக் கொள் அப்பா..- ஓட்டமாவடி அஷ்ரபின் -என்னைப்பற்றிய கவிதை-  நஸீரின் -1988.03.31- சிலகுறிப்புகள்-  தீரனின் - ப்ரம் சிறிலங்கா ட்டு இண்டியா பை எயார்மெயில்-  போன்ற புகழ்பெற்ற கவிதைகளுடன் மொத்தம்  7 கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.  கவிஞர். ஏ. இக்பாலின் தூது பற்றிய குறிப்பு- மற்றும் கல்முனை புகவம் நடத்திய  புதுச்சுவர் சஞ்சிகை விமர்சன விழாவில் எம்.ஏ.நுஹ்மான்- சண்முகம் சிவலிங்கம்- பாஸில்- கல்லூரன்- றாபிக் ஆகியோரின் உரைகள் பற்றிய குறிப்புகளும்- வெளியாகின. இது கல்முனை பைன் ஆர்ட். அச்சகத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

16வது தூது -(1989- ஏப்ரல்)

    இவ்விதழில் பரிமாற்றம் ஆங்கிலக் கவிதையாக எழுதப்பட்டுள்ளது.. ஒரு புதுமையான அமைப்பில் இது வெளியாயிற்று. தூதின் ஆஸ்தான கவிஞர் பலர் இனப்பற்றுடன் மிக மூர்க்கமான மொத்தம் 11 கவிதைகளை எழுதியிருந்தனர்.. இது அக்கரைப்பற்று ஆர்ஜே. அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.. 


17வது தூது - (1989 ஜ-லை)

    இவ்விதழுக்கான அனைத்து வேலைகளும் ”ர்த்தியாகு முன்பே அக்கரைப்பற்று அச்சகத்திற்கு ஒப்பு நோக்கச் சென்ற எமது புகவம் பொருளாளர் கபுர் இனந்தெரியாதோரால் இடையில் கடத்தப்பட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தூது தனது இறுதி மூச்சை இழந்தது...

-03-

    1983ல் தொடங்கி 1989 வரை ஆறு வருடங்கள். 16 இதழ்கள்.. சிறியதோ பெரியதோ ஒரு சஞ்சிகை தரும் பிரசவ வலி ஒரே மாதிரித்தான்.. இந்த 6 தூது வருடங்களிலும் நான் சந்தித்த  எத்தனையெத்தனையோ  கறுப்புப் பறவைகள்.. கவிஞர்கள்.. கவிதைகள்.. எழுத்தாளர்கள்.... தந்த அனுபவங்கள் சொல்லி மாளா.. என்னைப் போன்ற வாலிபர்கள் தொழில் கலக்கல் போர்ப்புதினங்கள் என்று அலைந்து கொண்டிருந்த போது  ஒரு பைத்தியக்காரத் தனமாக நான் மட்டும் -நமக்குத் தொழில் கவிதை கவிதையென்று செத்த அந்தப் போர்க் காலங்கள் கூட இனியன..

    இத்தனை வருட காலங்களிலும்... அப்பப்பா.. எத்தனையெத்தனையோ  கவிஞர்கள்.. கவிதைகள்.. பிரசுரங்கள்.. கபடப் பறவைகளான எழுத்தாளர்கள்.. நயவஞ்சகப் புலவர்களைப் பார்த்தாயிற்று.. பேசியாயிற்று..   இப்போது 2013ல் ஏறக்குறைய 33 ஆண்டுகளுக்குப் பின் இவற்றை மீட்டிப் பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது.. 

    இதுகாலவரைக்கும் நான் எழுதிய கவிதைகளில் கைவசமுள்ளதை ஒரு குத்து மதிப்பாக எண்ணிப் பார்த்த போது  எல்லாம் சேர்த்து சுமார் 456 கவிதைகள் தேறின. இருந்தும் நம்மை ஒரு கவிஞனாக  யாரும் மறந்து போய்க் கூட எங்கும் குறிப்பிடுவதாகக் காணவில்லை.. எனவேதான்  நமது கவிதைகளை ஒன்று சேர்த்து ஒரு சிறிய தொகுதியாகவாவது கொண்டு வரல் வேண்டும் என்று ஒரு ஆதங்கத்தின் காரணமாகவும்  1983களின் கவிதைப் பிரசுரங்கள் வெளியீடுகள் பற்றிய தகவல்களை மற்றும் அந்த ஆரம்பகால போர்க்கால அனுபவங்களை கோர்த்துக் காட்டும் ஒரு சிறிய கறுப்பு-வெள்ளை  அல்பமாகவும் இத்தொகுப்பினை முன் வைத்தேன்.

    ஏற்றுக் கொண்டு அருள்புரிவீர்களாக......

தீரன். ஆர்.எம். நௌஸாத்.
சாய்நதமருது.
சஅயெறளாயன@பவஅயடை.உழஅ.
0714457593—0767313135

(அபாயா என் கறுப்பு வானம் என்ற என் கவிதைத் தொகுப்புக்காக நான் எழுதிய என்னுரை இது- பொருத்தம் கருதி இங்கே பார்வைக்குட்படுத்தப்படுகிறது.)



-------------------------------------------------------------------------------------------------------------------------------










No comments:

Post a Comment