Saturday, October 25, 2025

DHARUL HIKAM-5

 

Dharul hikam -5

வெள்ளைத் தாஜ்மகால்

 

கறுப்புக் கண்ணாடி அணிந்த

வெள்ளைத் தாஜ்மகால் நீ

கூலிங் கிளாஸ் போட்டிருக்கும்

கூதல் காற்று நீ..

கரையில் வந்த

கடற்கண்ணி நீ

நுரைகள் எழுதிய

கடற்கவிதை நீ

௦௦

அவுஸ்திரேலிய நாட்கள்

இலங்கையில் நீ

இல்லைஎன்று

இலங்கை இலங்கவில்லை

எதுவும் இயங்கவில்லை..

 

ஆனால்,

மெல்பேர்னின் பனிக்காற்று

உனக்குப் பரவசமாய்

பாட்டு எழுதுகிறது..

 

அவுஸ்திரலியாவின்

தேசியக் கொடியில்

அது

உன் பெயரை

எழுதிப் பார்க்கிறது..

 

மூரே நதி

உன் பாதங்களை

முத்தமிடுகிறது

 

அந்த

வெள்ளைக்கார மண்ணுக்கு

மனுப் போட்டிருக்கிறேன்

உன்னை

சீக்கிரம்

இங்கு அனுப்பும்படி.

O

 

 

கவிதை நடை

 

நடந்து வா..

வண்ணப் பூக்கள் உன்னை

வரவேற்கின்றன

 

சின்னப் பூக்கள்

கைகுலுக்கிச் சிரிக்கின்றன

 

புற்தரை எங்கும், உன்

புன்னகை சிந்தியதால்

புதிதாய் பூக்கின்றன

 

பூக்கள்..

புன்னகை புரி..

உன்

பாதங்கள் பட்ட இடமெல்லாம்

பசுமை பாய் விரிக்கின்றதே..

 

நீ

பார்க்கும் போதெல்லாம்

பச்சைப் புல்லும் அல்லவா

வெட்கப்படுகிறது.. வா..

நடந்து வா.

.

கொடிகள் கூட உன்னில்

படரத் துடிக்கின்றன..

செடிகள் என் காதலைச்

சொல்கிற சேதியை

வாசிக்க -

நடந்து வா என் அன்பே

O

 

கொடுமைக்காரி

 

தூங்குகிறேன்

தூங்கவில்லை நினைவுகள்

எழுதுகிறேன்

எழுதவில்லை எதையும்...

என்ன கொடுமைக்காரி நீ

எது செய்யவும்

விடுகிறாயில்லை..

௦௦

 

 

கண்கள் நிறையக்

கனவுகள் காய்க்கின்றாய்

மழலை மொழியால்

மனதை உழுகின்றாய்

புன்னகையால் - தினமும்,

பூக்களை

விதைக்கின்றாய்

உனக்காக,

என்ன தருவேன்...

கண்ணே

கைகள் நிறையக்

கவிதைகள் அள்ளித் தருகிறேன்.

00

 

காத்தான்குடி நாட்கள்.

 

ஊர் வீதியில்

உலவித் திரிந்த

உற்சாகத் தீ

O

காலையில்

நடந்து வரும் காகிதப் பூ

O

வெள்ளைப் பர்தா

அணிந்து வந்த

வெள்ளை மேகம்

O

கண்ணுக்குள்

கடிதம் போட்ட

கனவு நிலா

0

 

கடற்கண்ணி

 

கரையில் வந்த

கடற்கண்ணி நீ என்று

கைகள் தட்டிக்

கூப்பிடுகின்றன

இந்த அலைகள்

கரையில் எழுதிய

கவிதை நீ என்று

நுரைகள் வந்து

வாசிக்கின்றன

மணலுக்குள் புதைகின்ற

உன் பாதங்களுக்கு

முத்தம் தரத்தான்

எத்தனை சிப்பிகள்

நீ கிடையாத ஏக்கத்தில்

அந்த நிலவும் நானும்

பேசிக் கொண்டிருக்கிறோம்

O

 

ஏவுகணை

 

ஈரானின் ஏவுகணைகள் போல்

உன்

விழிக்கணைகளை ஏவுகிறாய்

இஸ்ரேல் போல

சிதைந்து கிடக்கிறது

என் இதயம்.

0

 

கொடுமைக்காரி

 

தூங்குகிறேன்

தூங்கவில்லை நினைவுகள்

எழுதுகிறேன்

எழுதவில்லை எதையும்...

என்ன கொடுமைக்காரி நீ

எது செய்யவும்

விடுகிறாயில்லை..

0

 

இடி விழுந்த கதை

 

எதற்குச் சொன்னாய்

அந்தக் கதையை...

மூச்சு முட்டி

விழிகள் வெறிச்சிட்டு

விண்ணைப் பார்க்கவும்

கவிதைகளுக்கு

கபன் இட்டுப் போர்த்தவும்

தொண்டைக்குள்

கபுருக் குழி தோண்டவும்

நெஞ்சம் முழுவதும்

மஞ்சிப் பலகை மூடவும்

அன்பை இறக்கி

அடக்கம் செய்து,

எனக்கி நானே

தல்க்கீன் ஓதவுமா...

அந்தக் கதையைச் சொன்னாய்

அன்பே..

O

 

தனிமைத் தீ

 

வெறிச்சோடிக் கிடக்கிறது

என் வானம்

கானம் இசைத்த காற்றைக்

காணவில்லை என்று..

மேகம் சுமந்து பொழிந்த

கவிதை மழை

ஓய்ந்து போனதென்று..

சாய்ந்தமருது முழுவதும்

காய்ந்து போய் கிடக்கிறது..

முற்றும் என்று நீ

முகம் மறைத்ததில், என்

முற்றம் முழுவதும்

வற்றிப் போனது..

மோகனம் பாடிய குரல்

இன்று

கானகம் ஏகியதால்

வானகம் எல்லாம், வீணே

வெறிச்சோடிக் கிடக்கிறது.

தனிமைத் தீ

என்னைத்

தின்று கொண்டிருக்கிறது.

O

 

சொல்லித்'தீரா'க் காதல்

 

நமது காதல்

எத்தனை அழகானது

சிறகடிக்கும் ஒரு

வண்ணத்துப் பூச்சியின்

இறக்கை போல...

சிலீரென்று

முகத்தில் விழும்

ஒரு பனித்துளி போல..

ஒரு குழந்தையின்

மழலை மொழி போல..

காட்டு மூங்கிலின்

இசை போல

ஆஹா

நமது காதல்

எத்தனை அழகானது

0

 

கவிதைத் தலைப்பு

 

பூக்களை அனுப்புகிறேன்

உன்னிடம்!

புன்னகை பழக்கு

அதற்கு

O

தென்றலையும் அனுப்புகிறேன்

இதயத்தைத் திருடும்

விடயத்தை அதற்குச்

சொல்லிக்கொடு..

O

கவிதை ஒன்றும்

அனுப்புகிறேன்

உன் பெயரைத்

தலைப்பு வைத்துத் திருப்பு

0

 

கனவு முகம்

 

அதிகாலையில்

அலைபேசிக்குள் வந்த

அழகிய அதிசயம்

உன் முகம்

விடியலில்

விழித்த விடிவெள்ளி

உன் விழிகள்..

குளிருக்குள் கண்ட

குற்றால அருவி

உன் கூந்தல்..

செல்போனுக்குள்

கேட்ட ஒரு

சொல் போதும் எனக்கு

நான் உயிர் பெற...

O

மனமஹால்

 

அழகிய வீடு அது

அன்றெனக்குச்

சொந்தமாயிருந்தது...

பசுமையான அதன் முற்றத்தில்

படுத்திருந்தேன்

 

குளிர்ச்சியான அந்தக்

கூரையின் கீழிருந்தேன்

தடங்கல் ஏதுமில்லை

தனித்திருந்தேன்

வசித்திருந்த காலமெல்லாம்

விசித்திரம்தான்

உன் மனம் என்னும் அந்த

விசித்திர வீடு

0