சந்திர வதனம்.
உனது முகம்
எனது வானத்தில் சந்திரன்.
உனது குரல்
எனது சபையில்
குழலிசை...
உனது உருவம்
எனது மார்பில்
சந்தனமாலை.
உனது பெயர்
எனது தேசத்தின்
தேசிய கீதம்..
00
தீரன்..
புண்ணாக்கு
புண்ணாக்கு என்று சொல்லி
என் மனதைப்
புண்ணாக்குதல் முறையோ..
புண்ணாக்கு என்று
உன்நாக்கு சொல்லுதல் சரியோ
என்நாக்கு அதற்குப்
பதில் ஒன்று சொல்லுது கேட்பாயோ..
உன்னைப் பெண்ணாக்கு
முதலில், பின்னர்
என்னை உன் கண்ணாக்கு.
மஞ்சத்தில் படுத்து
உன்னை என் முன்னாக்கு.
அப்புறம் பார்
என்னாக்கு உன்னாக்குடன்
உரசி உரசித் தின்னாக்கு என்பேன்
நீதான் புண்ணாக்கு ஆவாய்
நான்தான் மாடு..
மேய்ந்து மேய்ந்து
இரவு முழுவதும்
பண்னாக்குவோம்..
விடியலைப் பின்னாக்குவோம்..
O
தீரன்
M-orning
A-ngele
Y-ou
1-
நட்சத்திரம் பதித்த
நீல வானப் போர்வையைப்
போர்த்தி,
சந்திரத் தலையணை இட்டு
உன்னைத்
தூங்க வைக்கிறேன் வா..
நதிகளில் உன் பெயரை
புல்லாங்குழலினால் எழுதி
இசைக்கிறேன் கேள்..
அந்தி வெயிலுக்குப் பிறந்த
மந்திரப் பெண்ணே
உன்னைச்
தென்றலை வீசி
சிறைப் பிடிக்கின்றேன் பார்.
வர்ணங்களால்
ஒரு வாழ்த்து எழுதி அதை
வானவில்லில் அனுப்புகிறேன்
வாசி.
வாழ்க நீ வளமாக
என்று என்னுடன் இணைந்து
வனக் குயில்களும்
வாழ்த்துகின்றன கேள்.
எழுதித் தீரா ஆசைகளுடனும்
மனம் நிறையக் காதலுடனும்
தீரன் அனுப்புகிற 'தூது'
இது.
0
தீரன்..
பறிகொடுத்தலின் பரிதவிப்பு
என்னுடைய பூ
எவருடைய தோட்டத்திலோ
பூத்திருக்கிறது
என் பாடலை
வேறொருவர் பாடுகிறார்
என் புல்லாங்குழலை
ஊதுவது எவரது வாய்?
என் கனவைக் காண்பது
இன்னொருவரின் கண்கள்
நான் எழுதிய கவிதைக்கு
யாரோ உரிமை கொள்கிறார்கள்
கையறுந்த நிலையில்
கண்ணீரை ஊற்றுகிறேன்
வேறென்ன செய்வேன்?
O
தீரன்
பூ வகை
சந்திரனில் பூத்த
சாமந்திப்பூ நீ
அந்தியில் மலர்ந்த
அந்திமந்தாரை நீ
0
தீரன்
ஊடல்
என்னில் கோபமில்லை
என்று கூறிவிட்டுக்
கோபித்திரு.....
என்னுடன்
பேசமாட்டேன்
என்று பேசிவிட்டுப்
பேசாதிரேன்..
இனி என்னைப்
பார்க்க மாட்டேன்
என்று சொல்லு
என்னைப் பார்த்து.
எனக்கு ஒன்றும்
எழுதப் போவதேயில்லை
என்று எழுதேன்..
என் கைகளைத்
தொடவே மாட்டேன்
என்று
என் கையில் அடித்து
சத்தியம் செய் பார்க்கலாம்
O
தீரன்
நான் உன் நூல்
என்னை வாசித்துவிட்டு
இடையில்,
எதற்காக
மூடி வைத்தாய்..
இந்த நூலகத்தில்
நீ
வசிக்க வராவிடடாலும்
வாசிக்கவாவது வாயேன்
உன் விழிகள் விரவிய
உன் விரல்கள் நிரவிய,
என் பக்கங்கள்
இன்னொரு கரத்தால்
புரட்டப்பட முன்னே...,
அட்டை கிழிந்து
அறைக்குள்
எறியப்பட முன்னே...
விட்ட
இடத்திலிருந்து
என்னை
விரைவாக
வாசித்து முடித்துவிடு
என் அன்பே..
0
தீரன்..
கனவு மொழி
கனவு மொழியால்
உனக்கொரு
கவிதை எழுத,
இமைகளைத் திறந்து
உன்
கனவுக்குள் வருகிறேன்
உன் கருவிழி ஊற்றி
வெண் விழியில்
எழுதுகிறேன்..
கண்ணீரால்
அழித்து விடாதே..
விழி மூடி
வாசித்துப் பார்.
விடிந்ததும்
முடிந்து விடும்
இந்தக் கனவுமொழி..
O
தீரன்..